முன்னாள் சபாநாயகரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல அவர்களால் ஏற்பட்ட வாகன விபத்து ஒருபோதும் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் அல்ல என்றும், அது தற்செயலாக நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும், அது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பாடசாலை அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.இந்த விபத்தினால் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவத்தில் சிக்கிய அசோக ரன்வலவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். விபத்துக்குள்ளான குழந்தை, தாய் உள்ளிட்ட தரப்பினருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதற்காக தானும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு விசாரித்து வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
விபத்து தொடர்பில் சட்டத்தை அப்படியே அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு முறையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட சில ஊடகங்கள் ஊடாக உண்மைக்கு புறம்பான மற்றும் போலியான தகவல்களை சமூகமயப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அவர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, ரன்வல மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதாக பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என வலியுறுத்திய ஜயசிங்க, தேவைப்பட்டால் அது தொடர்பில் சட்டரீதியான விசாரணையை மேற்கொண்டு உண்மையை உறுதிப்படுத்த பொலிஸாருக்கு முழுமையான வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.