
எல்லா சுற்றுலா வலயத்திற்கு வெளியிலிருந்து வரும் Pick Me மற்றும் Uber போன்ற வாடகை வாகன சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்கு, அப்பிரதேசத்தில் வசிக்கும் வாடகை வாகன சாரதிகள் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு எல்லா பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையில், எல்லா பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட இரு அதிகாரிகள், வெளியிலிருந்து வந்த சாரதியொருவரிடம் அப்பிரதேசத்தில் வாடகை வாகன சேவையில் ஈடுபட வேண்டாம் என கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளதுடன், பொலிஸார் அது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர். குறித்த காணொளியில் உள்ள சம்பவம் தொடர்பில் 2025 டிசம்பர் 19 அன்று எல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று (21) எல்லா பொலிஸ் பிரிவுக்குள் வாடகை வாகன சாரதியொருவரை தாக்க முயற்சித்தமை மற்றும் அவரது மோட்டார் வாகனத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாகவும், வாடகை வாகன சேவையில் ஈடுபட்ட பெண் ஒருவரை தாக்கி பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாகவும் பொலிஸாருக்கு இரு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகளில், சாரதியை தாக்க முயற்சித்தமை மற்றும் வாகனத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இரு சந்தேக நபர்களும், பெண் சாரதியை தாக்கி பணம் கொள்ளையிட்டமை தொடர்பில் ஒரு சந்தேக நபரும் உட்பட மூவர் எல்லா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் இன்று (22) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.