தேஹியத்தகண்டியின் முவகம்மன பிரதேசத்தில் இன்று (17) நண்பகல் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான வீதி விபத்தில் தாயும் ஒரு சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். தேஹியத்தகண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தேஹியத்தகண்டிய, மாவநாகம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது தாயும் அவரது 2 வயது சிறு குழந்தையும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மோதலில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உடனடியாக தேஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தாய் மற்றும் இளைய குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த குடும்பத்தின் மற்றைய ஆண் குழந்தையின் வயது 11 ஆகும். அவரும் முச்சக்கர வண்டியை ஓட்டிய தந்தையும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேஹியத்தகண்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News