தனியார் விமான நிறுவனத்தின் பெண் விமானி ஒருவர் தனது குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிகா கருணாரத்னவை பத்து இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று (08) உத்தரவிட்டார். இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாத சாமிகா கருணாரத்ன, நேற்று சட்ட உதவி பெற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வாதி செவ்வந்தி இனோகா சேனாதிவீர சார்பாக ஆஜரான சட்டத்தரணி ஜெருஷா தம்பையா நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து தனது சேவைதாரியுடன் உறவு வைத்துக்கொண்ட பிரதிவாதி பின்னர் அதை மறுத்துவிட்டதாகவும், அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் குழந்தைக்கு பராமரிப்புச் செலவு செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், குழந்தையின் தந்தை சாமிகா கருணாரத்ன என்பதை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் முறைப்பாட்டாளர் தரப்பு கோரியது.
எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை கடுமையாக நிராகரித்த சாமிகா கருணாரத்ன சார்பாக ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்கும் முழுப் பொறுப்பும் முறைப்பாட்டாளரையே சாரும் என்றும் வாதிட்டார். தனது சேவைதாரர் குறித்த முறைப்பாட்டாளருடன் பாலியல் உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டாலும், குழந்தையின் தந்தை என்பதை ஏற்றுக்கொள்வதையோ அல்லது அதற்காக டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஆஜராவதையோ முழுமையாக நிராகரிப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
மேலும், முறைப்பாட்டாளர் கர்ப்பமாக இருந்தபோது இந்திய தேசிய விமானி ஒருவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளதாகவும், அந்த இந்திய தேசியர் சமூக ஊடகங்கள் மூலம் குழந்தையைத் தனது குழந்தை என்று ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, சட்டத்தரணி பிரதிவாதியின் நிரபராதித்துவத்திற்காக விடயங்களை முன்வைத்தார். இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானித்தார்.
Tags:
Trending