இலங்கை மத்திய வங்கி, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதன் அரச கடன் திணைக்களத்தை (PDD) மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கு இணையாக அத்திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்த 'LankaSecure' பிரிவை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்துடன் (PSD) இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் முழுமையாகச் செயற்படத் தொடங்கியதுடன், இதற்கு முன்னர் மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடன் முகாமைத்துவ நடவடிக்கைகளின் முழுப் பொறுப்பும் அந்த அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடன் முகாமைத்துவக் கட்டமைப்பிற்குள் நிறுவனப் பொறுப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், அதன் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த பொறுப்புப் பரிமாற்றம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், அரச கடன் முகாமைத்துவச் சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தொடர்புடைய ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச பிணையங்களுக்கான பட்டியலிடப்படாத பிணையத் தீர்ப்பனவு முறைமை மற்றும் மத்திய வைப்பு முறைமை ஆகியவற்றை கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் கீழ் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த முறைமைகளைச் செயற்படுத்தும் பொறுப்பு, அரச பிணையப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் பணிப்பாளரின் கீழ் மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிடுகின்றது.