பிரித்தானிய அரசாங்கம் 2026 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில், அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடைமுறைகளில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. நாட்டிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் மொத்த எண்ணிக்கையை (Net Migration) கட்டுப்படுத்துவதும் குறைப்பதுமே இந்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ், விசா பெறுவதற்கான ஆங்கில மொழித் தேர்ச்சி தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 2026 ஜனவரி 08 ஆம் திகதி முதல், வேலை விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் 'B2' மட்டத்தில் (உயர்தர மட்டத்திற்கு சமமான) ஆங்கில அறிவை நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்னர் இந்தத் தேவை 'B1' மட்டத்தில் இருந்தது. இந்த மாற்றம் பட்டதாரிகள், திறமையான தொழிலாளர் விசா (Skilled Worker Visa) மற்றும் 'Scale-up' விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களை கடுமையாகப் பாதிக்கும்.
இருப்பினும், ஏற்கனவே விசா பெற்று பிரித்தானியாவில் தங்கியிருப்பவர்கள் தங்கள் விசா காலத்தை நீட்டிக்கும்போது (Extension) இந்த புதிய மொழிச் சட்டம் பொருந்தாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை அதாவது 'Indefinite Leave to Remain' (ILR) பெறுவதற்கான காலப்பகுதியிலும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முன்னர் இருந்த 5 வருட தகுதி பெறும் காலம் 10 வருடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற 20 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசாங்கத்தின் சமூக நலன்புரி சலுகைகளை 12 மாதங்களுக்கும் குறைவான காலம் பெற்றவர்கள் நிரந்தர வதிவிட உரிமைக்காக 15 வருடங்களும், நீண்டகால சலுகைகளைப் பெற்றவர்கள் 20 வருடங்களும் காத்திருக்க வேண்டும். Brexit செயல்முறைக்கு முன்னர் சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர் விசா பெற்றவர்களுக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கான 5 வருட காலம் 15 வருடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு வரும் நபர்கள் அந்நாட்டு மொழியைக் கற்று சமூகத்திற்கு நல்ல பங்களிப்பை வழங்க வேண்டும் என உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் வலியுறுத்தியுள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவுக்கு வந்த சுமார் 2.6 மில்லியன் குடியேற்றவாசிகளுக்கு இந்த புதிய சட்ட மாற்றங்களின் தாக்கம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.