பாகிஸ்தானின் வடமேற்கு எண்ணெய் வளப் பகுதியான கைபர் பக்துன்க்வா (KP) மாகாணத்தின் டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், பத்து பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவான 'அமன்' அமைதி குழுவின் தலைவர் நூர் ஆலம் மெஹ்சூட்டின் வீட்டில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வெடிப்பில் அவரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
விருந்தினர்கள் இசையுடன் நடனமாடிக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாகப் போராடினர். தாக்குதலுக்குப் பின்னர் ஆயுதமேந்திய குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குண்டுதாரியின் வயது சுமார் 17 ஆக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் அமைதி குழுவின் முக்கிய உறுப்பினரான வஹீதுல்லா மெஹ்சூத் அல்லது ஜிக்ரி மெஹ்சூத்தும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் சொஹைல் அப்ரிடி இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண பொலிஸ் தலைவருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் செயல்படும் தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு மீது பாதுகாப்புப் படையினர் கடும் சந்தேகம் கொண்டுள்ளனர். அமைதி குழு உறுப்பினர்களை தேசத்துரோகிகளாகக் கருதும் அந்த அமைப்பு, இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் நூர் ஆலம் மெஹ்சூட்டை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது, ஆனால் அவை பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டன.
பாகிஸ்தானில் நிலவும் வன்முறை கடந்த ஆண்டு சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் கைபர் பக்துன்க்வா மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் எல்லைப் பகுதிகளில் ஆயுதமேந்திய நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இராணுவம் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், அதே மாகாணத்தில் அமைதி குழு உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து தொடர்ச்சியான கொடிய தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஒரு சூழ்நிலையில் பதிவாகியுள்ளது.