2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை உரிய காலக்கெடுவிற்குள் முறையான கட்டண முன்மொழிவை சமர்ப்பிக்காததும், ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் பிழைகள் இருந்ததும் இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டாலும், அது இந்த காலாண்டில் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதால், அதனால் ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளும் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.சாதாரண நடைமுறைப்படி, 2026 ஜனவரி முதல் மார்ச் வரை அமுலுக்கு வரும் கட்டண முன்மொழிவை கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதி சமர்ப்பித்தது. அந்த முன்மொழிவிலும் பிழைகள் இருந்ததால், திருத்தப்பட்ட முன்மொழிவை ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு ஆணைக்குழு அறிவித்த போதிலும், அதை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதுவரை திருத்தப்பட்ட முன்மொழிவு எதுவும் கிடைக்கவில்லை, இப்போது அது கிடைத்தாலும், பொது ஆலோசனை மற்றும் மறுஆய்வுகளுக்குப் பிறகு, முதல் காலாண்டின் இறுதிப் பகுதிக்கு மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இத்தகைய குறுகிய காலத்திற்கு வருவாய் மற்றும் செலவுகளைச் சரிசெய்யும்போது, மின் கட்டணங்கள் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்றும், இது தேசிய பொருளாதாரத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்ட பிறகு, முதல் காலாண்டில் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான கட்டண முன்மொழிவை பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.