இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்படும் ஆண்டாக 2026 அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அண்மைய அனர்த்தங்களால் அழிவடைந்த வீடுகளை மீளக் கட்டுதல் மற்றும் அரசாங்கத்தின் வழமையான அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகள் உட்பட, அந்த ஆண்டில் 50,000 முதல் 55,000 வரையிலான புதிய வீடுகளைக் கட்ட எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
‘Rebuilding Sri Lanka’ நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் PROJECT 5M திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (09) முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மல்பெலிகல கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அலுபத்த கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்நேவ, பலாகல, இபலொகம, பலுகஸ்வெவ மற்றும் திரப்பனே ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்கப்பெறும். இங்கு, அதே இடத்தில் மீண்டும் வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும் என உறுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட, வீடுகளை இழந்த 26 குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் நட்டஈடு வழங்கப்பட்டதுடன், புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக சுமார் 6,000 வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதாகவும், ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 17,000 அல்லது 18,000 வீடுகள் மீளக் குடியேற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ், அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக 20,000 முதல் 25,000 வரையிலான புதிய வீடுகளைக் கட்ட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், 2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வீட்டு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக 10,000 வீடுகளும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 2,500 வீடுகளும், பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய உதவியின் கீழ் கட்டப்படும் வீடுகளும் உட்பட, வழமையான திட்டத்தின் கீழ் மேலும் 31,000 வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட பாரிய பொருளாதார வீழ்ச்சி ஒரு இயற்கை அனர்த்தம் அல்ல, நீண்டகாலமாக நிலவிய தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு என ஜனாதிபதி இங்கு நினைவுபடுத்தினார். எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்தது என்றும், 2025 ஆம் ஆண்டில் அதிக அரச வருமானத்தையும், 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிகக் குறைந்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையையும் பதிவு செய்து பொருளாதாரக் குறியீடுகளில் நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். அண்மைய அனர்த்தம் காரணமாக உள்கட்டமைப்புக்கு சுமார் 4.1 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், பாதிக்கப்பட்ட மக்களைக் கைவிடாமல் அவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இந்த அனர்த்த நிலைமையிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டில் மட்டும் 50,000 கோடி ரூபாய் பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வளவு பெரிய நட்டஈடு அல்லது நிவாரணம் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், பயிர்ச் சேதம் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்படும் என தெரிவித்தார். மக்களுக்கு அதிக வருமானம், குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகிய ஐந்து அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் வலியுறுத்தினார்.