மனைவியின் முகத்தில் அமிலத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது திடீரென உயிரிழந்த கைதியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல என்றும், மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கேகாலை பொது மருத்துவமனையின் நிபுணத்துவ சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ருசிர நதீரா அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மழுங்கிய ஆயுதத்தால் உடலின் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக நுரையீரல் நசுங்கி உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம்.
இந்த மருத்துவ முடிவுடன், இந்த மரணம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர், தெதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலிகல, வடுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான ரத்துவடுகே உபாலி ரணவீர என்பவராவார். பெரும் சொத்துக்களுக்கு உரிமையாளரான இவரின் தந்தை ஒரு அதிபர் மற்றும் தாய் ஒரு இல்லத்தரசி. அலவ்வ மஹரச்சிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த பிள்ளைகள் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இளைய இரு பிள்ளைகளும் கல்வி கற்று வருகின்றனர்.
நீண்டகாலமாக மதுபோதைக்கு அடிமையாகியிருந்த உயிரிழந்த நபர், இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த குடும்பத் தகராறுகள் காரணமாக மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் வயோதிபத் தாய் ஆகியோர் பெரிய வீட்டில் வசித்து வந்த நிலையில், இவர் அதற்கு கீழே அமைந்துள்ள அரைவாசி கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 03ஆம் திகதி மாலை இந்த பின்னணியிலேயே மனைவி மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலில் காயமடைந்த மனைவி தற்போது சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அமிலத் தாக்குதல் தொடர்பாக கடந்த 05ஆம் திகதி தெதிகம பொலிஸில் சரணடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அதே தினத்தில் வரக்காப்பொல துல்ஹிரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அன்று இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர், மறுநாள் (06) அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
சந்தேகநபரின் மரணம் தொடர்பாக கேகாலை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், பதில் நீதவான் நிஷாந்தி அபேரத்ன அம்மையார் சடலத்தை பரிசோதித்து ஆரம்ப நீதவான் விசாரணையை மேற்கொண்டார். மரணம் ஒரு கொலை என்று தெரியவந்ததையடுத்து, கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் குற்ற நிகழ்வு ஆய்வுக்கூட (SOCO) அதிகாரிகள் குழுவொன்று சிறைச்சாலைக்குள் சென்று விரிவான விசாரணையை நடத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், சடலத்தின் இறுதிச் சடங்குகள் குடும்ப உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.