புதிய பாடசாலை தவணை நாளை (5) ஆரம்பமாகிறது

news-2026-01-04-141306
2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடசாலை கால அட்டவணை மற்றும் செயற்பாட்டு வழிகாட்டல்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அண்மைக் காலமாக நாட்டின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் அதனால் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை கருத்திற்கொண்டு, அந்த கட்டமைப்புகள் வழமைக்கு திரும்பும் வரை பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாம் என அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் 2026 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை ஜனவரி மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், 5 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை மாற்றமின்றி தொடரும்.


அத்துடன், 6 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தினசரி கால அட்டவணை 45 நிமிட காலப்பகுதிகள் (Periods 7) ஏழைக் கொண்டிருக்கும் என்பதையும் கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது.

தேசிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டில் 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்பிற்கான புதிய கல்வி முறைகள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் முறையான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும். 1 ஆம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கான மாணவர் அடையாளங்காணல் மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் (Orientation) ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், அவர்களது முறையான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இந்த மாணவர்களுக்கான தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள் (Activity books) மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய கற்றல் தொகுதிகள் (Learning modules) உரிய திகதிகளுக்கு முன்னர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு உறுதிப்படுத்துகிறது.




இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து விடயங்கள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய விரிவான சுற்றறிக்கை 2026 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post