பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான எழுதுபொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதி கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு இவ்வாறு அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு, அதற்கமைய 2025 ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடுத்த ஆண்டிலும் அமுலில் இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை எழுதுபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன், இது நலன்புரி நன்மைகள் சபை ஊடாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை தடையின்றி தொடர்வதற்கு உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அஸ்வெசும திட்டத்தில் உள்ளடக்கப்படாத, ஆனால் இந்தக் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதியுடைய ஏனைய மாணவர் குழுக்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 300 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா மடாலயங்களில் கல்வி கற்கும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் அத்துடன் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள பாடசாலை செல்லும் பிள்ளைகளும் இந்தக் பிரிவில் அடங்குவர். அந்த மாணவர்களுக்கும் ஒருவருக்கு 6,000 ரூபா வீதம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு ஊடாக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.