நேற்று முன்தினம் (ஜனவரி 01) இரவு நவகமுவ, கொரதோட்ட, மணிக்காகார வீதிப் பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் வீட்டின் குளியலறைக்கு அருகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்ற இருவர் அம்பலாந்தோட்டை, வாடியகொட மற்றும் தெமட்டகொட, கெவலமுல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் முதலில் அத்துருகிரிய ஒறுவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒருவரின் உடலில் நான்கு குண்டுகளும், மற்றவரின் உடலில் ஒரு குண்டும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து 9 மில்லிமீட்டர் ரக 15 தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூன்று இளைஞர்களும் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த வாடகை வீட்டிற்கு குடியேறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மதுபான விருந்து நடத்திக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இது இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.