துபாயில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் பாதாள உலக உறுப்பினர் ரசிக சந்தித குமார அல்லது "சூட்டி மல்லி", கடந்த ஜூலை 3ஆம் திகதி கந்தான பிரதேசத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் சமீர மனஹரவுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தி, அவரது மைத்துனர் உபாலி குலவர்தனவை கொலை செய்த பிரதான சந்தேகநபர் ஆவார்.
துபாய் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டிருப்பது, போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்தபோது துபாய் விமான நிலையத்தில் வைத்துதான் என அந்த நாட்டிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் வெளிப்படுத்துகின்றன. மறைந்திருந்து அவர் இந்த தப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில், "கொண்டையா" என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி சூட்டி மல்லி போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிலியந்தலை பிரதேசத்தில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி ஒன்று, உயிருள்ள ரவைகள் மற்றும் இரண்டு வெளிநாட்டு கைக்குண்டுகளுடன் இவர் மேலும் நால்வருடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக அந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அவருக்கு எதிராக மேலும் பல குற்றச் செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கந்தான பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று மீண்டும் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த சமீர மனஹர மற்றும் அவரது மைத்துனர் உபாலி குலவர்தன ஆகியோர் பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டன, அவர் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.