மகாஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகல வனப்பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக 2026 ஜனவரி 24 ஆம் திகதி காலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் வராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 23 ஆம் திகதி மாலை மாடுகளைக் கட்டுவதற்காக அவர் வனப்பகுதிக்குச் சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பாததால், உறவினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து அவரைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந்த தேடுதலின் போது, வனப்பகுதியில் உள்ள ஒரு நீரோடைக்கு அருகில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்டபோது அவரது கழுத்துப் பகுதியில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், இது ஒரு கொலை என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் கொலை எந்தக் காரணத்திற்காக அல்லது யாரால் செய்யப்பட்டது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், மகாஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.