
ஹொரணை, பெல்லந்துடாவ பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரைக்குச் சொந்தமான 125 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடம்பர மோட்டார் வாகனத்தையும், புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்காக பக்தர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 37 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிவிட்டுத் தப்பிச் சென்ற, துறவறம் துறந்த ஒருவர் உட்பட மூவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள், பெரலபனாத்தர சமித்த தேரர் அல்லது விதாரணகே சமந்த என்ற துறவறம் துறந்த நபர், அவருக்கு உதவிய ரொட்டும்ப பிரதேசத்தைச் சேர்ந்த நாடகந்தகே இஷார சம்பத் மற்றும் மற்றொரு துறவி ஆவர்.
சம்பந்தப்பட்ட விகாரையில் வசித்த ஒரு பிக்குவால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரையின் விகாராதிபதி தேரரின் மறைவுக்குப் பின்னர், விகாரையின் சொத்துக்களையும் மோட்டார் வாகனத்தையும் பராமரிக்கும் பொறுப்பு இந்த சந்தேகநபரான பிக்குவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் அந்த நம்பிக்கையை மீறி, விகாரையின் பத்திரங்கள், சொத்துக்கள் மற்றும் பணத்தையும் எடுத்துக்கொண்டு துறவறம் துறந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது, பிரதான சந்தேகநபர் ஒரு பெண்ணுடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். அந்த இடத்தை சோதனையிட்டபோது, ஒரு வாள், பெண்களின் உள்ளாடைகள், கருத்தடை உறைகள், பாலியல் தூண்டுதல் மருந்துகள் மற்றும் காலி மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகநபர் விகாரையின் சொத்துக்களை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் வழியில், மதுபோதையில் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியதால், இதற்கு முன்னர் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 60,000 ரூபா அபராதத்தில் விடுவிக்கப்பட்டதும் வழக்கு விசாரணையின் போது தெரியவந்தது.
தப்பிச் சென்ற சந்தேகநபரால் விகாரைக்குச் சொந்தமான ஆறு புசல் வயல் நிலம் மற்றும் ஒன்றரை ஏக்கர் மேட்டு நிலத்தின் பத்திரங்களும், விகாரைக்குச் சொந்தமான மற்றொரு பத்திரமும் திருடப்பட்டுள்ளன. அத்துடன், விகாரையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா அமைப்பு, ஒரு புரொஜெக்டர் இயந்திரம் மற்றும் ஒரு சாவிக் கொத்து என்பவற்றையும் இவர் திருடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுடன், இந்தச் செயல் தொடர்பில் பிரதேசத்தின் தாதக சபை கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
திருடப்பட்ட மோட்டார் வாகனம் ஏற்கனவே வேறொருவருக்கு விற்கப்பட்டுவிட்டதாகவும், அதை மீண்டும் கண்டுபிடிப்பதற்காக ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தி சந்தேகநபர்கள் வேறு குற்றங்களைச் செய்துள்ளார்களா என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி ஹேமந்த விக்ரமாராச்சி நீதிமன்றத்தில் வாதாடினார்.