மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதி வரை ஒத்திவைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவிடம் வினவியபோது, எதிர்பாராத நேரத்தில் பாரிய காலநிலை அனர்த்தம் ஏற்பட்டதால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தடைகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, அந்தத் தேர்தல் சிறிது காலம் தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் நடத்த அரசாங்கம் ஆரம்பத்தில் தீர்மானித்திருந்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்றும், அதற்கான திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்தத் திருத்தங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
காலநிலை அனர்த்தத்திற்காக பெரும் தொகைப் பணம் செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கு பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுவது கடினம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவடைந்து 11 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அந்த அனைத்து மாகாண சபைகளும் தற்போது ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.