
மாத்தறை, ஹக்மன, கோங்கல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (6) இரவு ஒருவரின் கைகள் மணிக்கட்டிற்குக் கீழ் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் பிரிக்கப்பட்டு, அந்த உடல் பாகங்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹக்மன பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கொடூரமான குற்றம் பழைய தகராறு தொடர்பான பழிவாங்கலாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த நபர் ஹக்மன, கோங்கல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஹக்மன மாத்தறை வீதியில் ரணவீரு பஸ் தரிப்பிடம் அருகே நின்ற அவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளதாகவும், பின்னர் கோங்கல விஜய மாவத்தைக்கு அழைத்துச் சென்று கைகளை வெட்டிப் பிரித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெட்டிப் பிரிக்கப்பட்ட கை பாகங்கள் பொலித்தீன் பையில் போட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலத்த காயமடைந்த இந்த நபர் முதலில் கிரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்னவென்றால், தற்போதைய காயமடைந்தவர் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரின் மகனின் கையை வெட்டி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார் என்பதையும், அவரது தந்தைக்கு அமிலத் தாக்குதல் நடத்தியுள்ளார் என்பதையும் ஆகும். இந்த குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போது அவர் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றத்துடன் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் உட்பட மூவரை கைது செய்ய ஹக்மன பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சந்தேகநபர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன, வெட்டிப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட கை பாகங்களைக் கண்டறியவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.