தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (24) மாலை கணவன் மனைவி உட்பட மூவர் பயணித்த கார் கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் வத்தளை, கால்வாய் வீதிப் பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய இந்திரா காந்தி ஜோதிராஜா என்ற பெண் ஆவார். இவர் சாரதியின் சித்தி என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் சாரதியின் 30 வயதுடைய மனைவி பலத்த காயமடைந்துள்ளதாகவும், 36 வயதுடைய சாரதி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மத்தளையை நோக்கி கார் பயணித்த போது பத்தேகம மற்றும் பின்னதுவ இடையே 89.61 கி.மீ மற்றும் 89.71 கி.மீ இடைப்பட்ட பகுதியில் இடதுபுற பாதுகாப்பு கேபிள் வேலியில் மோதி, பின்னர் வலதுபுற மத்திய பாதுகாப்பு வேலியில் மோதி, வீதியின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 52 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். காரை செலுத்திய சாரதியின் மனைவி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயமடைந்த சாரதி 58 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் சாரதிக்கு தூக்கம் வந்ததா அல்லது டயர் வெடித்ததா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதியதால் பாதுகாப்பு வேலிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.