மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நேற்று (25) அதிகாலை கொழும்புப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் வீதியில் உள்ள ஒரு இசைக்கல்லூரியின் கட்டிடம் மற்றும் அதன் வாயில் மீது T56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்புப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 15 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முன் வெற்றுத் தோட்டாக்கள் கிடப்பதாக கொழும்புப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலின் பேரில், நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 2.35 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில், பின் இருக்கையில் இருந்தவர் திடீரென துப்பாக்கியால் கட்டிடத்தையும் வாயிலையும் நோக்கி சுடும் காட்சிகள் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக ஒரு உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் கல்லூரியின் கட்டிட சுவர்களிலும் வாயிலிலும் பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் வந்த நபர்கள் குறித்த தகவல்களை கண்டறிய சுற்றியுள்ள பாதுகாப்பு கமெரா காட்சிகளை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.