கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி கொஹுவளை பொலிஸ் பிரிவின் களுபோவில, சரணங்கர வீதி, போதியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவொன்று இவர்களை நேற்று (03) தெஹிவளை பொலிஸ் பிரிவின் களுபோவில பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதி, துப்பாக்கியைப் பொறுப்பேற்றிருந்த சந்தேகநபர், அதனை எடுத்துச் சென்ற சந்தேகநபர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் 25, 28, 33 மற்றும் 45 வயதுடைய தெஹிவளை பிரதேசவாசிகள் ஆவர். மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, இந்த குற்றம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதலின் விளைவாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து மூன்று ரிவோல்வர் ரக துப்பாக்கிகள், பத்து 9mm ரக தோட்டாக்கள், 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி கொஹுவளை பொலிஸ் பிரிவின் சரணங்கர வீதி, போதியவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்னால் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொஹுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.