பொதுஜன ஐக்கிய முன்னணி தலைவர், முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (மொட்டு) இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் நேற்று முன்தினம் (6) தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் நுகேகொடை இல்லத்தில் (5) ஆம் திகதி இரவு நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த இந்த அழைப்புக்கு அநுர பிரியதர்ஷன யாப்பாவிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் காரியவசம் தெரிவித்தார்.
"அநுரவும் இப்போது எங்களுடன் இணையுங்கள். நாம் ஒன்றாக இருந்தவர்கள். நாம் ஒன்றாக இருந்த காலத்தில் நாட்டுக்கு நிறைய வேலை செய்தோம். நாம் ஒன்றாக இருந்து பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய நாடு நாம் பிரிந்தால் அழிந்துவிடும்” என்று முன்னாள் ஜனாதிபதி அங்கு கூறியதாக காரியவசம் தெரிவித்தார். தானும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் அநுர பிரியதர்ஷன யாப்பாவை மொட்டுடன் இணையுமாறு நீண்டகாலமாக அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் சபாநாயகர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பெருமளவிலானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.