அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில், ஆதியடிக்கட்டு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் இன்று (05) காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளது. குறித்த நபர் மேலும் இருவருடன் மீன்பிடிக்கச் சென்று, கல்ஓயா ஆற்றின் மறுபுறம் நிறுத்தப்பட்டிருந்த படகைக் கொண்டுவர நீந்திக் கொண்டிருந்தபோது முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்தமை மற்றும் இரவு நேரத்தில் நிலவிய கடும் இருள் காரணமாக நேற்று இரவு 10 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டியிருந்தாலும், இன்று இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக அக்கரைப்பற்று பொலிஸாரால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பிரதேசவாசிகள், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் அத்துடன் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஜனசா நலன்புரி குழுக்களின் தீவிர பங்களிப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர் ஒலுவில் 01, அஷ்ரப் நகர் - 12 பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
சடலம் மீட்கப்பட்ட பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல்-ஜவஹீர் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டதுடன், முதலைத் தாக்குதலால் மரணம் நிகழ்ந்ததாக முடிவு செய்யப்பட்டு சடலம் இறுதிச் சடங்குகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.