2022 மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்கு அண்மித்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் முறையான விசாரணையை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவொன்றுடன் தொடர்புடையதாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் வழங்குமாறு இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சட்டத்தரணி கலாநிதி ரவீந்திரநாத் தாபரேவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், முன்னாள் ஜனாதிபதியைத் தவிர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஷவேந்திர சில்வா மற்றும் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உள்ளிட்ட பல உயர் அரச அதிகாரிகள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சில பிரதிவாதிகளுக்கு இதுவரை உரிய நோட்டீஸ்கள் கிடைக்கவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மனுவை மேலதிக பரிசீலனைக்காக மே மாதம் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
சம்பந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக செலுத்தப்பட்ட எந்தவொரு நட்டஈட்டுத் தொகையும் அரசியல் தொடர்புகள், பக்கச்சார்பு அல்லது வேறு எந்த முறையற்ற செல்வாக்குமின்றி நியாயமாக விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வெளிப்படையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனுதாரர் இங்கு வலியுறுத்துகிறார்.
சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமல், இவ்வாறு பெருமளவு பொதுப் பணத்தை நட்டஈடாகச் செலவிடுவது குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார்.
2025 பெப்ரவரி 05ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு நாளில், சுகாதார அமைச்சர் மற்றும் அப்போதைய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்து தெரிவித்ததாவது, 2022 மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் சொத்துச் சேதமடைந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட 43 பேருக்கு 1.22 பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, சாதாரண நட்டஈட்டு வரம்புகளை மீறி இவ்வாறு அதிகளவான நட்டஈட்டுத் தொகையைப் பெற்றுள்ளனர் என, வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த குற்றச்சாட்டையும் மனுதாரர் தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.