பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக கடமையாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனிநபர் குழுவொன்றை நியமிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும், அந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் இதில் கலந்துகொண்டதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். அதன்படி, அரச நிர்வாக அமைச்சின் விசாரணை அதிகாரியொருவரின் தலைமையில் இந்த தனிநபர் விசாரணைக்குழு 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தலைமை அதிகாரி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு சமிந்த குலரத்னவை தெரிவு செய்தமை, அவரது தகுதிகளை பரிசோதித்தமை மற்றும் அவர் அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்ட விதம் என்பன குறித்த விசாரணைக் குழுவுக்கு வழங்கப்பட்ட பிரதான விடயப்பரப்பாகும். இந்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை 2026 ஜனவரி 23ஆம் திகதி பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதில் இரண்டு பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசாரணை அறிக்கையின்படி, குலரத்னவுக்கு எதிராக பல முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை சமர்ப்பித்து பாராளுமன்ற தலைமை அதிகாரி மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் பதவியைப் பெற்றுக்கொண்டமை, அப்பதவியில் தனது சேவையை நிரந்தரமாக்கிக்கொண்டமை, அத்துடன் தனக்கு உரிமையற்ற சம்பள போனஸ் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அரசாங்க விதிமுறைகளை மீறி அநியாயமான இலாபங்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியமை என்பன அவற்றில் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஜி.கே.ஏ.சி.கே. குலரத்னவின் சேவையை இடைநிறுத்தி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்த நியமனங்கள் மற்றும் நிரந்தரமாக்கல்கள் தொடர்பில் சில அதிகாரிகள் செயற்பட்ட விதம் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றமாக கருதப்படுவதால், இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து, விடயங்கள் இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் முதல் பரிந்துரைக்கு அமைய அவரது பணி ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டு ஒழுங்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழுவை நியமித்ததிலிருந்து அறிக்கை அடிப்படையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட செயல்முறை வரை எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவமும் இருந்ததை நினைவுபடுத்திய அமைச்சர், சம்பந்தப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கத்திற்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடும் உரிமை உள்ளதாகவும் வலியுறுத்தினார்.