வெனிசுலாவின் தலைநகரான கராகஸில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் தொடர்ச்சியான பலத்த வெடிப்புகளும், விமானங்கள் பறக்கும் சத்தங்களும் கேட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்கள் மூலம் கராகஸ் நகரை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அறிக்கைகளின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் சுமார் ஏழு வெடிப்புகள் கேட்டதாகவும், நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய இராணுவத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராகஸ் நகர மையத்தில் அமைந்துள்ள லா கலோட்டா விமானப்படைத் தளம் மற்றும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தங்கியிருப்பதாக நம்பப்படும் ஃபுவர்டே டியூனா இராணுவத் தளம் ஆகியவற்றிலிருந்து பெரும் புகை எழுவதைக் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த திடீர் வெடிப்புகள் மற்றும் விமான சத்தங்கள் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை விவரித்த கார்மென் ஹிடால்கோ என்ற அலுவலக ஊழியர், முழு பூமியும் அதிர்ந்ததாகவும், தூரத்தில் கேட்ட வெடிப்புகள் மற்றும் விமான சத்தங்கள் காரணமாக தான் மிகவும் பயந்துவிட்டதாகவும் கூறினார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியிலிருந்து நீக்குவதற்காக அமெரிக்கா பல மாதங்களாக கடுமையான இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தங்களை பிரயோகித்து வரும் பின்னணியில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவின் வடக்கு கடற்கரைக்கு அப்பால் ஒரு பெரிய இராணுவப் படையை நிறுத்தியுள்ளார், மேலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் படகுகளை இலக்கு வைத்து சமீபத்தில் பல தாக்குதல்களையும் நடத்தியிருந்தார்.
அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் தனது அரசாங்கத்தைக் கவிழ்க்கவும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும் அமெரிக்கா முயற்சிப்பதாக ஜனாதிபதி மதுரோ இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், சனிக்கிழமை பதிவான இந்த வெடிப்புகள் குறித்து வெனிசுலா அரசாங்கம், வெள்ளை மாளிகை அல்லது பென்டகன் இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.