திட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன இளைஞனின் சடலம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக கெப்பெட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பெட்டிப்பொல கவரம்மன பிரதேசத்தில் மண்மேடுகள் சரிந்து விழுந்திருந்த நிலையில், மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவினரால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர் மிரஹவத்த வெரல்லாவத்தையைச் சேர்ந்த ஆர்.எம். அசித கோசல (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திட்வா சூறாவளியுடன் ஏற்பட்ட மண்சரிவுகளில், கெப்பெட்டிப்பொல கவரம்மன பிரதேசத்தில் சரிந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த லொறி சாரதியொருவர், கடந்த நவம்பர் 27ஆம் திகதி மீண்டும் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தார்.
நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, அந்த இடத்தில் வாகனப் போக்குவரத்துக்காக மாத்திரம் மண் அகற்றப்பட்டதுடன், காணாமல் போனவரின் சடலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் நல்ல காலநிலை காரணமாக, வெலிமடை - நுவரெலியா வீதியில் கெப்பெட்டிப்பொலவிலிருந்து பலுங்கல வரையான வீதியில் ஆங்காங்கே சரிந்துள்ள மண்ணை வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்போது அகற்றி வருகிறது. அவ்வாறு கவரம்மன பிரதேசத்தில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கெப்பெட்டிப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.