வங்காளதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதிக்குழுத் தலைவர் நஜ்முல் இஸ்லாம் பதவி விலகக் கோரி அந்நாட்டு வீரர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக வங்காளதேச பிரீமியர் லீக் (BPL) தொடரின் நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறித்த தலைவரின் அறிக்கை மூலம் தாங்கள் கடுமையாக அவமதிக்கப்பட்டதாகக் கூறும் வீரர்கள், அவர் அப்பதவியிலிருந்து விலகாவிட்டால் போட்டிகளைப் புறக்கணிப்போம் என்ற உறுதியான நிலையில் உள்ளனர். இதன் விளைவாக, இன்று நடைபெறவிருந்த போட்டிக்கு எந்த அணியும் மைதானத்திற்கு வராதது ஒரு விசேட நிகழ்வாகும்.
நோகாலி எக்ஸ்பிரஸ் (Noakhali Express) மற்றும் சட்டோகிராம் ராயல்ஸ் (Chattogram Royals) அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (15) பிற்பகல் 1.00 மணிக்கு ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவிருந்தது. ஆனால், குறித்த நேரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே இரு அணிகளும் மைதானத்திற்கு வர மறுத்துவிட்டன. நிதிக்குழுத் தலைவர் பதவி விலகாவிட்டால் வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நலன்புரி சங்கம் (CWAB) ஜனவரி 14 அன்று அறிவித்திருந்தது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வீரர் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, வீரர் சங்கம் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. போட்டி ஆரம்பமாகவிருந்த அதே நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், வங்காளதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCB) ஒரு அறிக்கையை வெளியிட்டு, குறித்த அதிகாரியின் அறிக்கை குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான விளக்கமளிக்க 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
BPL தொடர் தற்போது அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், தொடரின் வெற்றிக்காக வீரர்கள் தங்கள் தொழில்முறைத் தன்மையைக் காட்டுவார்கள் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேலும் வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, வீரர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் முடிவைப் பொறுத்து இன்றைய போட்டி ஆரம்பமாவது சில மணிநேரம் தாமதமாகலாம் என்று உள்நாட்டு வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.