இலங்கையுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று (ஜனவரி 19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் மூன்று இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர்.
ஒருநாள் தொடர் ஜனவரி 22, 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இப்போட்டிகள் பகல்-இரவு போட்டிகளாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இருபதுக்கு 20 தொடர் ஜனவரி 30, பெப்ரவரி 01 மற்றும் 03 ஆம் திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவுப் போட்டிகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
28 அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணி, நேற்று காலை 8.20 மணிக்கு டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இணைந்து ஒரு விசேட வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பாதுகாப்புக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து விமான நிலைய வளாகத்தில் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.