அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) உத்தியோகபூர்வமாக விலகியுள்ளதுடன், அந்த அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவும் மறுத்துள்ளது. உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணைவதற்கு எந்த திட்டமும் இல்லை என்றும், இனிமேல் நோய் கண்காணிப்பு மற்றும் பிற முன்னுரிமைகள் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நேரடியாக இணைந்து செயல்படும் என்றும் அமெரிக்க சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்புக்கு ஏற்கனவே தேவையானதை விட அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, டிரம்ப் நிர்வாகம் இந்த நிலுவைத் தொகையை செலுத்த மறுத்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2025 இல் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளிலேயே இந்த முடிவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார். நோய்கள் பரவுவதைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் தகவல்களைப் பகிர்வது ஆகியவற்றில் உலக சுகாதார அமைப்பு தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை குற்றம் சாட்டுகிறது. ஒரு சர்வதேச அமைப்பிலிருந்து விலகும்போது ஒரு வருட முன் அறிவிப்பு மற்றும் நிலுவைத் தொகையை செலுத்துவது பொதுவான சட்டமாக இருந்தாலும், விலகுவதற்கு முன் பணம் செலுத்துவது கட்டாய நிபந்தனையாக சட்டத்தில் இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் வாதிடுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 18% ஐ ஈடுசெய்த மிகப்பெரிய நன்கொடையாளரான அமெரிக்கா விலகியதால், அந்த அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக, அமைப்பின் நிர்வாகக் குழுவை பாதியாகக் குறைக்கவும், பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் வேண்டியுள்ளது என்றும், ஆண்டின் நடுப்பகுதிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்றும் WHO அறிவித்துள்ளது. இந்த முடிவு அமெரிக்க சட்டத்தை மீறுவதாக ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், டிரம்ப் நிர்வாகம் அந்த விமர்சனங்களை புறக்கணித்ததாகத் தெரிகிறது.
பில் கேட்ஸ் உட்பட உலகளாவிய சுகாதார நிபுணர்கள், உலகிற்கு உலக சுகாதார அமைப்பின் தேவை மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அமெரிக்கா விரைவில் திரும்பி வரும் என்று தாங்கள் நினைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். நோய்களைக் கண்டறிந்து எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் நம்பியிருக்கும் அமைப்புகளுக்கு இது தீங்கு விளைவிக்கும் என்று ப்ளூம்பெர்க் பிலாந்த்ரோபீஸ் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகள் உட்பட மேலும் 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து உத்தியோகபூர்வமாக விலக அமெரிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.