இந்த பெரும்போக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் பத்து பில்லியன் ரூபாவை (ஆயிரம் கோடி) ஒதுக்கியுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அச்சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்ததாவது, ஒரு கிலோ நாடு நெல் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பா நெல் 130 ரூபாய்க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் 140 ரூபாய்க்கும் அரசாங்கத்தால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.
ஏற்கனவே நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் அம்பாறை மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும், பொலன்னறுவை உட்பட மேலும் சில பிரதேசங்களில் இருந்து எதிர்காலத்தில் நெல் கையிருப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்தமாக இந்த பருவத்தில் இரண்டு இலட்சத்து பத்தாயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை அனைத்து வசதிகளையும் தயார் செய்துள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 166 நெல் சந்தைப்படுத்தல் சபை மையங்கள் செயலில் உள்ளன. விவசாயிகள் சிரமப்படாமல், அவர்கள் நெல்லை விற்பனை செய்த மறுநாளே அதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியவந்தது. நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக லங்கா சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பு ஊடாகவும் நெல் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கணிசமான அளவு நெல் கையிருப்பு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் 14 சதவீதத்திற்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே கொள்வனவு செய்யப்படுவதால், இது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் விவசாய சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல் கொள்வனவுக்கான தேவையான மாதிரிகள் தற்போது சபைக்கு கிடைத்து வருகின்றன. மகாவலி வலயம் உட்பட ஏனைய பிரதேசங்களிலிருந்தும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் நெல் கையிருப்புகள் கிடைக்கும். இவ்வாறு சேகரிக்கப்படும் நெல் கையிருப்புகள் அரிசியாக மாற்றப்பட்ட பின்னர், நுகர்வோருக்கு தற்போதுள்ள உத்தரவாத விலையை விட குறைந்த விலைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் தெரிவித்தது.