புத்தளம், மஹகும்புகடவல பிரதான குளத்திற்கு அருகில் சட்டவிரோதமாக பால் ஆமையொன்றை வேட்டையாடிய வெளிநாட்டவர் ஒருவரை கடந்த 15ஆம் திகதி மஹகும்புகடவல பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் நாற்பத்தொரு வயதுடைய சீன நாட்டவர் ஆவார்.
இலங்கையில் மிகவும் பாதுகாக்கப்பட்ட விலங்கு இனமாக பெயரிடப்பட்டுள்ள பால் ஆமைகளை பிடிக்கும் நோக்கில் சந்தேகநபர் செயற்பட்டுள்ளது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து வேட்டையாடப்பட்ட சுமார் இரண்டு கிலோகிராம் எடையுள்ள உயிருள்ள பால் ஆமையொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன், இந்த விலங்குகளைப் பிடிக்க அவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு தூண்டில் கம்பிகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில், அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மதுரங்குளி பிரதேசத்தில் வசித்து வருபவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2028 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கையில் தங்குவதற்கு அவருக்கு சட்டபூர்வமான விசா அனுமதிப்பத்திரம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹகும்புகடவல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் சந்தன தலைமையிலான அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.