2016 முதல் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம்

pensions-to-government-officials-from-2016

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக்க பண்டார அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து அதிகாரிகளினதும் நியமனக் கடிதங்கள் திருத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




அதன்படி, குறித்த நியமனக் கடிதங்களில் “இந்த நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியது. மேலும், நீங்கள் விதவை மற்றும் அநாதைப் பிள்ளைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கும், விதவை கணவர் மற்றும் அநாதைப் பிள்ளைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கும் பங்களிக்க வேண்டும். அரசாங்கத்தினால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் முறைக்கு அமைய நீங்கள் அதற்கான பங்களிப்புப் பணத்தைச் செலுத்த வேண்டும்.” என திருத்தப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, எதிர்காலத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் அதிகாரிகளின் நியமனக் கடிதங்களிலும் ஓய்வூதிய உரிமைகள் வழங்கப்படும் எனவும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைய அமைச்சரவையின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட அதிகாரிகளின் நியமனக் கடிதங்களில் அவர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post