
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பயிற்சி பெற்ற விசேட வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவரது ஸ்மார்ட் கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில், தொலைபேசியை பறித்த குற்றச்சாட்டை மட்டும் ஒப்புக்கொண்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன நேற்று (23) ஆறு மாத கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். கல்னேவ, புதிய நகரம், டி மூன்று கால்வாய் வீதிப் பிரதேசத்தைச் சேர்ந்த கே.
பி. மதுரங்க ரத்நாயக்க என்ற இந்த பிரதிவாதிக்கு சிறைத்தண்டனையுடன் மேலதிகமாக 1500 ரூபா அபராதமும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன், வைத்தியரிடமிருந்து பறிக்கப்பட்ட கைத்தொலைபேசியை மறைத்து வைத்திருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சந்தேகநபரான முன்னாள் படைவீரரின் சகோதரி ஷாலிகா ஹர்ஷனி ரத்நாயக்க மற்றும் எச். கே. மிதில சம்பத் குமாரசிங்க ஆகியோருக்கும் தலா ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பிரதான நீதவான் அவர்கள் இருவரின் சிறைத்தண்டனையையும் இரண்டு வருட காலத்திற்கு இடைநிறுத்த உத்தரவிட்டதுடன், அவர்களுக்கு தலா 1500 ரூபா அபராதமும் விதித்தார்.
வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த பிரதான சம்பவம் தொடர்பில் சுமார் ஏழு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த முன்னாள் இராணுவ வீரரை, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு பிரதான நீதவான் இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் மூன்று மாதங்களுக்கும் மேலாகியும், அவர் இதுவரை சம்பந்தப்பட்ட பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை, மேலும் அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் தடை உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அத்துடன், உயிருள்ள கைக்குண்டை வைத்திருந்தமை தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளதால், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்ட அதே நாளில் சந்தேகநபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டியிருந்தது ஒரு சிறப்பம்சமாகும்.
இந்தக் குற்றம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் குறிப்புகள் சட்டமா அதிபரின் அறிவித்தலின் பேரில் தற்போது சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஏ. சி. தயானந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, எதிர்காலத்தில் சட்டமா அதிபரால் பிரதிவாதிக்கு எதிராக வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையகப் பொலிஸாருக்கு இதற்கு முன்னர் உத்தரவிடப்பட்டிருந்ததுடன், நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட வைத்தியரால் சந்தேகநபர் மிக இலகுவாக அடையாளம் காணப்பட்டார். இந்த வழக்கில் ஏழு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதிவாதி சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை, பாதிக்கப்பட்ட தரப்பின் உரிமைகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜரானார். முறைப்பாட்டை அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோகர் நிஷானி சேனவிரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் உதவிப் பொலிஸ் பரிசோகர் ஏ. சி. தயானந்த மேற்கொண்டார்.