அரச நிதி ஒருமைப்பாட்டிற்கு இடமளிக்கும் வகையில் இந்நாட்டின் வரி முறையை மேலும் முறைப்படுத்தும் நோக்குடன், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி அச்சட்டத்தில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக கடந்த 2025 மே மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சட்ட வரைஞர் இந்த திருத்தப்பட்ட சட்டமூலத்தை தற்போது தயாரித்துள்ளார், அதற்கான சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் மூலம் வரி முறையின் செயல்திறனை அதிகரிப்பதும் மற்றும் அரச வருவாய் இலக்குகளை அடைவதும் எதிர்பார்க்கப்படுகிறது.