குழந்தை பெற்றெடுத்து மருத்துவமனையில் விட்டுவிட்டு இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி

the-student-girl-who-gave-birth-to-a-child-in-the-hospital-and-went-to-write-the-report-today

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று (17) தோற்றுவதற்கு தயாராக இருந்த கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 15ஆம் திகதி கேகாலை பொது வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்தச் சிறுமி இவ்வாறு பிரசவித்துள்ளதாக கேகாலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.




இந்த பாடசாலை மாணவியின் தந்தை சில காலத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் குடும்பத்தின் சுமையை தாய் சுமந்துள்ளார். அவர் பிரதேசத்தில் உள்ள சிறிய தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறித்து சம்பாதிக்கும் சிறிய தொகைப் பணத்தில் சிறுமியையும் அவளது மூத்த சகோதரனையும் பராமரித்து வந்துள்ளார். சிறுமியின் சகோதரன் தற்போது வேலைக்காக கொழும்பு பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலை அதிகாரிகளுக்கு விடயங்களை தெளிவுபடுத்திய மாணவி தெரிவித்துள்ளதாவது, தான் இதற்கு முன்னர் ஒரு பாடசாலை மாணவருடன் காதல் உறவு வைத்திருந்ததாகவும், பின்னர் அதை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், தான் பெற்ற குழந்தை அந்த உறவின் விளைவுதான் என்பதை அவர் நேற்று (16) மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.




கடந்த 15ஆம் திகதி அதிகாலையில் சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, அதை திடீர் நோய் என்று நினைத்த தாய், உடனடியாக முச்சக்கர வண்டியில் அவளை கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சிறுமி அன்றைய தினம் காலையில் குழந்தையைப் பிரசவிக்கும் வரை தனது மகள் கர்ப்பமாக இருந்ததை தாய் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை தற்போது கேகாலை பொது வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுக்குட்பட்ட குறைமாதக் குழந்தை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று நடைபெறும் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இந்த பாடசாலைச் சிறுமிக்கு வாய்ப்பளிக்கும் நோக்குடன் வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று அவளை வைத்தியசாலையிலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post