மாக்கந்துரே மதுஷ் கொலை வழக்கின் விசாரணையை மாளிகாவத்தையிலிருந்து CID இற்கு மாற்றக் கோரிக்கை.

madush-murder-investigation-in-makandure-is-requested-to-be-removed-from-the-palace-and-handed-over-to-cid

சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஷித அல்லது மாக்கந்துரே மதுஷ் பொலிஸ் காவலில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அவரது தரப்பு சட்டத்தரணிகள் இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸாரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை செயல்முறை குறித்து திருப்தி அடைய முடியாது எனத் தெரிவித்த மதுஷின் மனைவி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.




கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ மதுஷின் மனைவி மிகவும் அஞ்சியதாகவும், அதற்கு காரணம் அப்போதைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தமை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினர். பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்பட்ட இந்த மரணம் மிகவும் சந்தேகத்திற்குரியது என்பதால், மாளிகாவத்தை பொலிஸாரிடமிருந்து இந்த விசாரணைகள் அகற்றப்பட வேண்டும் என சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு சுட்டிக்காட்டியது.

எவ்வாறாயினும், நீதிச் சேவை ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, தற்போது நடைபெற்று வரும் விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அகற்றி வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க சட்டரீதியான சாத்தியம் இல்லை எனத் தெரிவித்து நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்தார். தற்போதைய விசாரணை நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை என உணர்ந்தால், அது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்ய முடியும் என தான் கடந்த வழக்கு விசாரணையின்போதும் அறிவுறுத்தியதாக நீதவான் மேலும் இங்கு நினைவுபடுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post