டொனால்ட் டிரம்ப்பின் அவமதிப்புகள் நேட்டோவை உலுப்புகின்றன

donald-trumps-insults-rock-nato

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக, வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு அல்லது நேட்டோ (NATO) தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நட்பு நாடான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என அண்மையில் விடுத்த அச்சுறுத்தலுடன், நேட்டோ அமைப்பின் எதிர்காலம் குறித்து பல உறுப்பு நாடுகள் மத்தியில் கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.




இதற்கிடையில், கனடா ஒரு வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் கூட்டணிகளும் அரசாங்கங்களும் மாறக்கூடும் என்றாலும், அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான புவியியல் காரணிகள் மற்றும் இருப்பிடத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்று ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஒரெல் பிரோன் சுட்டிக்காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்திடம் இருந்து எழக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கூட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன், 1949 ஆம் ஆண்டு கனடா உட்பட பன்னிரண்டு நாடுகள் வாஷிங்டனில் நேட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தற்போது 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட இது, உலக வரலாற்றில் பழமையான பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது. ஒரு உறுப்பினரின் மீதான தாக்குதலுக்கு அனைவரும் ஒன்றிணைந்து பதிலளிக்க வேண்டும் என்ற அதன் 5வது சரத்து, இதுவரை வரலாற்றில் 2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவால் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.




அத்தகைய பின்னணியிலும், அமெரிக்காவிற்கு மீண்டும் ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால், நேட்டோ உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தான் நம்பவில்லை என்று டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். அமெரிக்கர்களுக்காகப் போராடி இறந்த நட்பு நாடுகளின் வீரர்களின் சேவையையும் அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போர் நடவடிக்கை, நேட்டோவின் பிணைப்பை சோதிக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று அவரது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கும் அமெரிக்க நடவடிக்கைக்கு பல நேட்டோ நட்பு நாடுகள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டாலும், அதில் நேரடியாக தலையிட அவர்கள் விரும்பவில்லை என்று ஜனாதிபதி தனது நீண்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா அவர்களைப் பாதுகாத்தாலும், தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அமெரிக்காவிற்காக எதையும் செய்ய மாட்டார்கள் என்று அவர் அப்போது குற்றம் சாட்டினார்.



இதற்கிடையில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு எதிராக கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்தப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை உறுதிப்படுத்த தேவையான பங்களிப்பை வழங்குவதாக அந்த நாடுகள் தங்கள் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளன.

டிரம்ப்பின் சுயநல மற்றும் பழிவாங்கும் தன்மை கொண்ட அறிக்கைகள் காரணமாக நேட்டோ அமைப்பு கடுமையாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்று பேராசிரியர் பிரோன் சுட்டிக்காட்டுகிறார். அவரது ஆத்திரமூட்டும் நடத்தைகள் நட்பு நாடுகள் மத்தியில் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளன, மேலும் இது சர்வதேச அளவில் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு தடையாக உள்ளது. ஈரானுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு, பல ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த போர் ஐரோப்பாவின் போர் அல்ல என்று கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும், நேட்டோவுக்குள் அமெரிக்காவின் எதிர்காலம் ஒரு நிலையான மட்டத்தில் உள்ளது என்பது ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் எர்வன் லாகாடெக்கின் கருத்து. ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை ஒருதலைப்பட்சமாகக் குறைப்பதைத் தடுக்கும் மற்றும் நேட்டோ கட்டளை அமைப்பில் அமெரிக்கப் பங்கைத் தொடரும் சட்டங்களை இயற்ற அந்நாட்டு காங்கிரஸ் நடவடிக்கை எடுத்ததே இதற்குக் காரணம். மேலும், அமெரிக்கா 5வது சரத்துக்கு தொடர்ந்து கட்டுப்பட்டிருக்கும் என்று நேட்டோவுக்கான அமெரிக்கத் தூதர் மெத்யூ விட்டேகர் கடந்த பிப்ரவரி மாதம் உறுதியளித்தார்.

ஆனால் காங்கிரஸின் சட்டங்களால் மட்டும் ஜனாதிபதியின் உடனடி முடிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை கனடா அனுபவபூர்வமாகவே அறியும். டிரம்ப்பின் முதல் பதவிக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா-கனடா-மெக்சிகோ சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூட அவரது எதிர்பாராத வரி கொள்கைகளால் தற்போது ஆபத்தில் உள்ளது. அவர் கனடாவின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார், மேலும் அந்நாட்டின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதம மந்திரிகளை "ஆளுநர்கள்" என்று அழைத்து அவமதிக்கும் போக்கையும் கொண்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் ஐரோப்பா தனது இராணுவ திறன்களை வலுப்படுத்த முயற்சித்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவும் தற்போது தனது பாதுகாப்பு செலவினங்களை கணிசமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post