
தீவின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்து, தனது மகன் கொண்டுவரும் அந்தத் தங்க நகைகளை அடகு வைத்து இலட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, அந்தப் பணத்தில் மகனுக்கு போதைப்பொருள் பாவனைக்கு வசதி செய்து கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஐம்பத்து மூன்று வயதுடைய தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கடந்த 13ஆம் திகதி வடகளுத்துறைப் பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்லும் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அவரது மகன் கொள்ளையடித்துள்ளார்.வென்னப்புவ, தம்பரவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பதினெட்டு வயதுடைய பல்கலைக்கழக மாணவியின் தங்கச் சங்கிலியை சந்தேகநபரான இளைஞன் பறிக்க முயன்றபோதே இந்த குற்றச் செயல்கள் அம்பலமாகியுள்ளன. அப்போது பிரதேச இளைஞர் ஒருவரால் அவர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவரிடமிருந்த 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. வடகளுத்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தான் பறிக்கும் தங்கச் சங்கிலிகளை தனது தாயிடம் ஒப்படைப்பதாகவும், அவர் அவற்றை அடகு வைத்துப் பெறும் பணத்தில் தனக்கு போதைப்பொருள் பாவனைக்குத் தேவையான பணத்தை அவ்வப்போது வழங்குவதாகவும் பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, கைது செய்யப்பட்ட தாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மகன் கொண்டுவந்து கொடுத்த தங்கச் சங்கிலிகளை அடகு வைத்ததாகக் கூறப்படும் ஐந்து மையங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அடகு வைக்கப்பட்டுள்ள சுமார் பத்து தங்கச் சங்கிலிகளைக் கண்டறிய பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் உள்ள சந்தேகநபரான இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.