போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டுக்கு அமைய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சட்டத்தரணி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) பன்னிரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த தண்டனை ஆறு வருடங்களில் கழிந்துபோகும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன அம்மையார், நீண்ட விசாரணையின் பின்னர் இந்தத் தீர்ப்பை அறிவித்தார். பிரதிவாதியான சட்டத்தரணிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் முறைப்பாட்டாளரால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
அவருக்கு எதிராக சட்டமா அதிபரால் இரண்டு குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன, அவற்றில் ஒன்று பொரளை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணங்கள் தயாரித்ததாகும். அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 06 வருடங்கள் வீதம், மொத்தம் 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்க நீதிபதி தீர்மானித்தார்.
விசாரணையின் போது, இவ்வாறு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சட்டத்தரணி 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது தெரியவந்தது.