வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிறைச்சாலை பஸ்ஸில் இரண்டு கைதிகளை பணயக்கைதிகளாகப் பிடித்த சந்தேகநபரான கைதியை, சிறைச்சாலை அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பிறகு கட்டுப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (07) மாலை பதிவாகியுள்ளதுடன், பணயக்கைதிகளை சந்தேகநபரின் பிடியிலிருந்து அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர் கேகாலை, கோட்டியாகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடத்தல், தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மேலும் சில கைதிகளுடன் இந்த பஸ்ஸில் வெலிக்கடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் காலி பூஸ்ஸா சிறைச்சாலைக்கு மாற்றும் நோக்கத்துடன் அவர் அழைத்து வரப்பட்டார்.
தன்னை பூஸ்ஸா முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்த சந்தேகநபர், பஸ் வெலிக்கடை மருத்துவமனைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தபோது திடீரென அதன் கதவுகளைப் பூட்டி, மற்ற இரண்டு கைதிகளின் கழுத்தில் கூர்மையான தகடு ஒன்றை வைத்து பணயக்கைதிகளாகப் பிடித்தார். தன்னை பூஸ்ஸா சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றால், அந்த இரண்டு பணயக்கைதிகளின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று அவர் சிறைச்சாலை அதிகாரிகளை கடுமையாக அச்சுறுத்தினார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள், பஸ்ஸின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து பணயக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஏற்பட்ட கடுமையான சண்டையில் காயமடைந்த சந்தேகநபரான கைதி தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின் கடத்தல், தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றங்கள் தொடர்பாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் ருவன்வெல்ல நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் மேலும் உறுதிப்படுத்தினார்.