அனுமதியின்றி கொண்டு செல்லத் தயாராக இருந்த பெருமளவிலான மண்ணெண்ணெய் கையிருப்புடன் இரண்டு சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க கித்துல்கல பிரதேசவாசிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கித்துல்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 05ஆம் திகதி அதிகாலை கித்துல்கல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் லொரி ஒன்றிற்கு மண்ணெண்ணெய் ஏற்றப்பட்ட விதம் அப்பகுதி மக்களின் அவதானத்திற்கு உட்பட்டது. அங்கு நான்கு டாங்கிகளைப் பயன்படுத்தி சுமார் 4000 லீட்டர் மண்ணெண்ணெய் குறித்த லொரியில் ஏற்றப்பட்டுள்ளதுடன், அந்த சட்டவிரோத எரிபொருள் கையிருப்பை கேகாலை பகுதிக்கு கொண்டு செல்வதே அவர்களின் திட்டமாக இருந்தது.
நிலைமையை அவதானித்த பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு குறித்த லொரியை தமது பொறுப்பில் எடுத்து கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருளை கடத்த முயன்ற லொரி சாரதியையும் அவரது உதவியாளரையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் அன்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட மண்ணெண்ணெய் கையிருப்பு மற்றும் சந்தேக நபரான சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் 12ஆம் திகதி ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.