மாவட்ட செயலாளர்கள், அமைச்சு செயலாளர்கள் உட்பட அரச சேவையின் உயர் மட்ட பதவிகள் 381ஐ இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளால் மட்டுமே வகிக்கக்கூடிய வகையில் வரையறுத்து வெளியிடப்பட்டிருந்த நிர்வாக சேவை அரசியலமைப்பை செல்லுபடியற்றதாக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த குறித்த அரசியலமைப்பின் ஊடாக ஏனைய அரச ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்மானித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வாறு இரத்து செய்யப்பட்ட நிர்வாக சேவை அரசியலமைப்பு, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி இலக்கம் 1840/2 கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரச சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. இதன் மூலம் பிரதேச செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் போன்ற பதவிகளுக்கு நியமிக்கும் போது நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டதால், பிரதிவாதியான அரச சேவை ஆணைக்குழு ஏனைய சேவைகளை தாழ்ந்த மட்டத்திற்கு தள்ளியுள்ளது என நீதிமன்றம் தீர்மானித்தது.
இலங்கை திட்டமிடல் சேவை, கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டி. மந்திரிஆரச்சி உட்பட ஆறு அரச அதிகாரிகள் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் பிரதிவாதிகளாக அரச நிர்வாகச் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பு நீதிபதிகள் யசந்த கோதாகொட, திலீப் நவாஸ் மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் அறிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா வாதிட்டார். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா நீதிமன்றத்தில் ஆஜரானார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கிய உயர் நீதிமன்றம், நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி புதிய வழிகாட்டுதல்களைத் தயாரிக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டது. அது தொடர்பான தேவையான ஆலோசனைகளை வழங்குவது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மனுதாரர்களுக்கு உரிய நீதிமன்ற கட்டணங்களை செலுத்துமாறும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.