மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் ஆறாவது நாளாகவும் தொடரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவர் புதிய தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.
இஸ்ரேலியப் படைகள் லெபனான் மற்றும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன, ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரம் முழுவதும் பலத்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்துள்ளன. ஈரானிய ஏவுகணைகள் வான்வெளியில் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய வானில் பல வெடிப்புகளும் காணப்பட்டன.
இப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடியின் தாக்கம் பரவி வரும் நிலையில், கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகளிலிருந்தும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. ஈரானிய ட்ரோன்கள் இரண்டினால் தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு வளைகுடாப் பிராந்தியத்தில் எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், அமெரிக்கக் கப்பல் ஒன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது.
இந்தக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், பிரித்தானியப் பிரஜைகளை அப்பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதற்காக அந்நாட்டு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் விமானப் பயணம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தாமதமாகியுள்ளது. ஓமானிலிருந்து நேற்று இரவு புறப்படவிருந்த இந்த விமானம் இன்று புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ஒரு விமானப் பயணி, இந்த நிலைமையை "முழுமையான கேலிக்கூத்து" என்று வர்ணித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானில் மேலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு உள்ள அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு பிரேரணைக்கு எதிராக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமியற்றுபவர்கள் வாக்களித்துள்ளனர்.