கட்டுக்கஸ்தோட்டை பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி ஓட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதிவீர தெரிவித்தார்.
பொதுமக்கள் குறித்த காணொளியை இணையத்தில் வெளியிட்ட பின்னரே இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு முதலில் தெரியவந்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை (10) கட்டுக்கஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து செயற்பட்ட பொலிஸார், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இன்று குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எதிராக கொலை முயற்சி உட்பட பல பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த முச்சக்கரவண்டியின் உரிமை மாற்ற ஆவணங்கள் முறையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த வாகனத்தை விற்ற நபர் மற்றும் அதை வாங்கிய நபர் ஆகிய இருவர் தொடர்பாகவும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சேனாதிவீர மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமைக்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், எதிர்காலத்திலும் இவ்வாறான ஆபத்தான வாகன ஓட்டங்கள் மற்றும் வீதி விதிகளை மீறுதல் தொடர்பில் பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் தாமதமின்றி சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.