ஹன்வெல்லையில் பாடசாலை பஸ் - முச்சக்கர வண்டி விபத்தில் பாதிரியார் ஒருவர் உயிரிழப்பு

a-pastor-was-killed-in-a-school-bus-three-wheeler-accident-in-hanwella

ஹங்வெல்ல, வனஹகொட பிரதேசத்தில் பாடசாலை பஸ்ஸுக்கும் முச்சக்கர வண்டிக்கும் இடையில் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட பாரிய வீதி விபத்தில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பிலியந்தலை, ஹொன்னந்தர பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பது வயதுடைய ஒருவராவார்.

விபத்தில் பலத்த காயமடைந்த அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




பொலிஸ் விசாரணைகளின்படி, உயிரிழந்த மதகுரு மற்றுமொருவருடன் ஹைலெவல் வீதியூடாக அவிசாவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அந்த நேரத்தில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி மோதியுள்ளது. மோதலின் தீவிரம் காரணமாக முச்சக்கர வண்டியின் கைப்பிடி சாரதியின் மார்புப் பகுதியை துளைத்துச் சென்றுள்ளதுடன், அவருடன் பயணித்த மற்றைய நபரும் பலத்த காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் திடீர் மரண விசாரணை ஹோமாகம திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் சமாதான நீதவான் சிந்தக உதய குமாரவினால் நடத்தப்பட்டதுடன், பிரேத பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் எம். எஸ். தினேத் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட மரணத்தை விளைவிக்கும் மழுங்கிய காயங்களே இந்த மரணத்திற்கு காரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி முடிவுக்கு வந்துள்ளார். இந்த வீதி விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் (92840) திசாநாயக்கவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

a-pastor-was-killed-in-a-school-bus-three-wheeler-accident-in-hanwella

Post a Comment

Previous Post Next Post