கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்த எரிபொருள் பவுசர்கள் எரிபொருள் இல்லாமல் மீண்டும் திரும்பிச் சென்றதாக வெளியாகும் ஊடக அறிக்கைகள் மற்றும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வலியுறுத்துகிறது. அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகேவிடம் இது குறித்து வினவியபோது அவர் இதை உறுதிப்படுத்தினார்.
இன்று விநியோகிக்கப்படவிருந்த எரிபொருள் அளவு நேற்று இரவே விநியோகிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று மேலதிக எரிபொருள் இருப்பைப் பெறும் எதிர்பார்ப்புடன் இந்த பவுசர்கள் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்திற்கு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு மேலதிகமாக எரிபொருள் விநியோகம் செய்யப்படாததால் சம்பந்தப்பட்ட பவுசர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன. அதன்படி, அந்த பவுசர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக திருப்பி அனுப்பப்படவில்லை, மாறாக, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மேலதிக இருப்பு விநியோகிக்கப்படாததால் தான் என முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் விளக்கினார்.
தற்போது மே மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்காலத் தேவைகளுக்காக மேலும் எரிபொருள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதால், தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என மயூரா நெத்திகுமாரகே பொதுமக்களுக்கு அறிவிக்கிறார்.
இதற்கு முன்னர் நேற்றைய தினமும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்த ஊடகங்கள் மூலமாகவே தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன, பின்னர் அந்த பொய்யான அறிக்கைகளை முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே திருத்த வேண்டியிருந்தது. ஒரு சில நாசகார ஊடக நடவடிக்கைகளின் மூலம் எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கி மக்களை அரசாங்கத்தின் மீது வெறுப்படையச் செய்ய இவ்வாறான போலியான செய்திகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.