சர்வதேச கால்பந்து சம்மேளனம் அல்லது ஃபிஃபா (FIFA) அமைப்பு, மகளிர் கால்பந்து அணிகளின் நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் பதவிகளில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தை கட்டாயமாக்கும் வகையில் தனது விதிகளை திருத்தியுள்ளதாக கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, ஃபிஃபா போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு மகளிர் கால்பந்து அணியிலும் ஒரு பெண் தலைமைப் பயிற்சியாளராகவோ அல்லது உதவிப் பயிற்சியாளராகவோ கட்டாயம் பணியாற்ற வேண்டும். மேலும், ஒவ்வொரு அணியின் மருத்துவ ஊழியர்களில் குறைந்தது ஒரு உறுப்பினரும், மாற்று வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளில் உள்ள அதிகாரிகளில் இருவர் பெண்களாக இருக்க வேண்டும் என்பதும் இதன் மூலம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபிஃபா அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய விதிகள் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. அதன்படி, இந்த விதிகள் 2027 இல் நடைபெறவிருக்கும் அடுத்த மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் முழுமையாக செயல்படுத்தப்படும்.