நள்ளச்சியா நீர்த்தேக்கத்தில் ஆசிரியர், மாணவர் இருவர் மூழ்கி மரணம்

two-people-drowned-in-nallachchiya-reservoir

தம்புள்ளை நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரையில் இருந்து நீர் பாயும் பிரதான நீர்ப்பாசனக் கால்வாயில் குளிக்கச் சென்ற பாடசாலை ஆசிரியர் ஒருவரும் பாடசாலை மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான செய்தி நேற்று (18) பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 29 வயதுடைய தனுஷ்க உதயங்க என்ற ஆசிரியரும் 




அனுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் உயர்தரம் படித்து வந்த 19 வயதுடைய ஹேஷான் தசுன் என்ற மாணவரும் ஆவர். அவர்கள் பந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் தெரிவித்தபடி, நேற்று மாலை மேலதிக வகுப்புகள் முடிந்த பின்னர், நல்லச்சிய கால்வாயில் உள்ள ஒரு கடவையில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய அவர்கள் இருவரும், பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து சுமார் முன்னூறு மீட்டர் கீழே குளித்துக் கொண்டிருந்த சிலர், நீரில் அடித்து வரப்பட்ட ஒருவரை முதலில் கண்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் மற்றவரையும் கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




அதன் பின்னர், பிரதேசவாசிகள் தனிப்பட்ட லொரி ஒன்றின் மூலம் இருவரையும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. உயிரிழந்த ஆசிரியரின் சடலம் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையிலும், மாணவரின் சடலம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று பகல் அனுராதபுரம் திசாவெவவில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய மற்றுமொருவரைக் காப்பாற்ற பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார். அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post