
ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்களின் உள்ளாடைகள் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து சுமார் 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான துணி வகைகளையும், அந்த துணிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளையும் திருடிய அதே நிறுவனத்தின் நான்கு ஊழியர்களை பாணந்துறை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆடைகள் தைப்பதற்காக வெட்டப்பட்ட துணிகள் மற்றும் அந்த துணிகளைப் பயன்படுத்தி வேறு வர்த்தக நாமங்களின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் என்பன சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட துணிகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 27, 32, 37 மற்றும் 55 வயதுடைய அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த துணி வெட்டுபவர் ஒருவரும், விநியோக அதிகாரி ஒருவரும், இரண்டு லொரி சாரதிகளும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பிலியந்தலை, வீரவில மற்றும் திக்ஹேனபுர பிரதேசங்களைச் சேர்ந்த இவர்கள், ஹொரணை முனகம பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக மிகவும் சூட்சுமமாக இந்த திருட்டை மேற்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிற்சாலை உரிமையாளர் கடந்த 9ஆம் திகதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட துணி வகைகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வதாக பாணந்துறை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முதலாவது சந்தேகநபர் மகரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டுடன் தொடர்புடைய ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின்படி, தொழிற்சாலையில் ஆடைகளுக்காக துணிகள் வெட்டப்படும் போது, சந்தேகநபர்கள் ஒரு பகுதியை திட்டமிட்டு பிரித்து இரகசியமாக தொழிற்சாலையிலிருந்து வெளியே எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு திருடப்பட்ட துணி வகைகளை மகரகம பிரதேசத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அனுப்பி, வேறு பெயரில் ஆயத்த ஆடைகளாக தைத்து முடித்துள்ளமை தெரியவந்துள்ளது. இந்த திருடப்பட்ட துணி வகைகளை முதலில் முனகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைத்து, பின்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள ஒரு தங்குமிடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கண்டறிந்துள்ளனர்.